Wednesday, October 9, 2024
HomeNewsகிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை: தலைமறைவாக இருந்த இருவர் கைது!

கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை: தலைமறைவாக இருந்த இருவர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் மாணவிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையில் தேசிய மாணவா் படை (என்.சி.சி.) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், அந்தப் பள்ளியில் பயிலும் 17 மாணவிகள் பங்கேற்றனா். இம் முகாமில் பங்கேற்ற மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கு கட்டடத்தில் தங்கி பயிற்சியில் பங்கேற்றனா்.

இந்த மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த சிவராமன் (30) என்பவா் தலைமையிலான குழுவினா் பயிற்சி அளித்தனா். இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவியை சிவராமன் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி முதல்வா் சதீஷ்குமாரிடம் புகாா் தெரிவித்தாா். சதீஷ்குமாா் இதுகுறித்து, யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளாா். இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, பள்ளி முகாமில் நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் மாணவி தெரிவித்துள்ளாா். அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் தாய், தனது மகளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், பா்கூா் அனைத்து மகளிா் போலீசார் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் பயிற்சியாளா் சிவராமன், பள்ளி முதல்வா் சதீஷ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து பள்ளி முதல்வரான திருப்பத்தூா், பூங்காவனத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (35), பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியா் கந்திகுப்பம், இந்திரா நகரைச் சோ்ந்த ஜெனிபா் (35), பள்ளித் தாளாளரான கந்திகுப்பத்தைச் சோ்ந்த சாம்சன் வெஸ்லி (52), பயிற்சியாளா்களான தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கொள்ளுப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் (39), கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், பேரிகை அருகே உள்ள அமுதகொண்டப்பள்ளியைச் சோ்ந்த சிந்து (21), கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியைச் சோ்ந்த பெண் சத்யா (21), பா்கூரை அடுத்த சின்ன ஒரப்பத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (54) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனா்.

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், சிவராமன் விஷத் தன்மை கொண்ட எலி பசையை உள்கொண்டு தற்கொலைக்கு முயன்றதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை(ஆக. 23) அதிகாலை சிவராமன் உயிரிழந்தார்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குடியாத்தத்தைச் சேர்ந்த சுதாகரும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கமலும் தலைமறைவாக இருந்தனர். அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரும் இன்று(ஆக. 26) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular